ஆண் பிள்ளைகளுக்கு முன்னால் அம்மணம் ஆக்கி எஜமானியம்மா







வூதி அரேபியாவில் எஜமானர்களின் கொடுமைக்கு பலிக் கடா ஆக்கப்பட்டிருக்கும்  தமிழ் பெண் ஒருவரின் கதை இது.  பெருமாள் ராஜகுமாரி (வயது -35).


கொழும்பில் கொஸ்கம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர். இவரது தந்தைக்கு வயது-75. தாய்க்கு வயது 65.


13 வருடங்களுக்கு முன்பே கணவனால் கைவிடப்பட்டு விட்டார். மூன்று குழந்தைகள். ஒரு குழந்தைக்கு கண் பார்வை குறைவு. பெற்றோரையும், பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு.

 எனவே கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி சவூதி அரேபிய வீடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாகச் சென்றார்.  எஜமானர், எஜமானரின் மனைவி, எஜமானரின் 07 பிள்ளைகள் ஆகியோருக்கு வேலை செய்ய வேண்டும். 07 பிள்ளைகளில் 4 பேர் திருமணம் செய்து விட்டனர்.

திருமணம் ஆனவர்களின் வீடுகளுக்கும் சென்று வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை 4.00 மணிக்கு எழுந்து வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். வீட்டு சுற்றுப் புறம்,  வீட்டுப் பூங்கா ஆகியவற்றை துப்புரவு செய்தல் வேண்டும்.

 எஜமானி அம்மா காலை 10.30 மணி அளவில்தான் தூக்கம் கலைந்து எழுவார். மலசல கூடங்களை துப்புரவு செய்ய வேண்டும். குசினியில் உள்ள பாத்திரங்கள் அனைத்தையும் சுத்தமாக விளக்கி கழுவுதல் வேண்டும். பின் காலை உணவை தயாரிக்க உதவி செய்தல் வேண்டும்.

 அவித்த முட்டைகள், பால் உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவார்கள். பால் குடிப்பார்கள். ஆனால் இவருக்கு இவ்வுணவுகளை ஒருபோதும் கொடுக்கவே மாட்டார்கள்.



ஒரு ரொட்டித் துண்டும், ஒரு கோப்பை தேநீரும்தான் இவரது அன்றாட காலை சாப்பாடு. இரவு 6.00 மணிக்குதான் மதிய போசணம். சோறும், தக்களிப் பழத்தில் தயாரிக்கப்பட்ட சொற்ப கறியும் வழங்கப்படும்.

 மீன், இறைச்சி, மரக்கறி என்று வேறு எவற்றையும் சாப்பிடக் கொடுக்க மாட்டார்கள்.  இரவுச் சாப்பாடு பெரும்பாலும் இல்லை. ஒரு சில நாட்களில் மாத்திரம் சொற்ப மக்குரோனி ( ஒரு வகை நூடில்ஸ்) மற்றும் வெங்காயம், ஒரு துண்டு தக்காளிப் பழம் ஆகியவற்றை சாப்பிடக் கொடுப்பார்கள்.

 வழமையாக இராப் போசணத்தை தர மறந்து விடுவார்கள்.  இவர் ஒழுங்காக துப்புரவு வேலைகளை செய்கின்றார் என்று எஜமானியின் அம்மாவுக்கு மனதில் தோன்றி விட்டால் அவ்வளவுதான். எஜமானனை மயக்கி வளைக்க திட்டம் போடுகிறார் என்கிற சந்தேகத்தில் இவரை நன்றாக வதைத்து எடுப்பார்.

 மாறாக நன்றாக துப்புரவு வேலைகளை செய்ய தவறி விட்டார் என்று எஜமானி அம்மாவுக்கு தோன்றினாலும் வாட்டி எடுத்தே தீருவார். இவரை திட்டி தீர்க்கின்றமை எஜமானி அம்மாவின் அன்றாட வேலைகளில் ஒன்று. எஜமானன் மேல் இவர் கண் வைத்திருக்கின்றார் என்று எஜமானரின் பிள்ளைகளுக்கு கோள் சொல்லுவார்.

 உடனே எஜமானரின் பிள்ளைகள் இவர் மீது கோபத்தை கொட்டுவார்கள். மிரட்டுவார்கள். கொடுமையாக சித்திரவதை செய்வார்கள். ஆனால் நாட்டில் உள்ள பெற்றோரையும், பிள்ளைகளையும் அனைத்து இன்னல்களையும் இவர் தாங்கிக் கொள்வார்.

 எஜமானர்கள் ஐந்து மாத சம்பளத்தை இவருக்கு கொடுக்கவில்லை. சம்பளத்தை தரும்படி கெஞ்சியும், இரந்தும் கேட்டுக் கூட அந்தக் கல் நெஞ்சங்கள் இரங்கவே இல்லை. சம்பளத்தை கேட்கின்றார் என்பதற்காகவே எஜமானியம்மா இவரை நச்சரிக்க தொடங்கி விட்டார். எஜமானர் குடும்பத்தினரின் சித்திரவதைகள் அளவு கடந்த போயின.

 10 இரவுகள் தொடர்ச்சியாக இராப் போசணம் கொடுக்கவில்லை. உடல் வருத்தத்துக்கு பனடோல் மாத்திரை கேட்டபோது கூட கொடுக்கவில்லை.   கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதி  காலை 10.00 அளவில் இவர் எஜமானி அம்மாவின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, மூட்டை முடிச்சுக்களையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு அவசரமாக வெளியேறினார்.



அருகில் இருந்த பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.  மதியம் 1.00 மணி அளவில் எஜமானரின் ஒரு மகன் பொலிஸ் நிலையத்துக்கு வந்து இருக்கின்றார். குழைந்து இவருடன் பேசி இருக்கின்றார். ஏன் வீட்டை விட்டு வெளியேறினார்? என்று வினவி இருக்கின்றார். இவர் பிரச்சினைகளை சொல்லி அழுது இருக்கின்றார்.

 குறிப்பாக சம்பளப் பிரச்சினையை கூறி இருக்கின்றார். சம்பளத்துடன் வருவார் என்று வாக்குறுதி வழங்கி விட்டு எஜமானரின் மகன் சென்றிருக்கின்றார்.  அன்று இரவு 10.30 மணி அளவில் இவரை சவூதியில் உள்ள இலங்கைத் தூத்ரகத்தினர் பொறுப்பு ஏற்றனர்.  எஜமானரின் மகன் அங்கு வந்தார்.

 மூன்று மாத சம்பள பணத்தை இவரை வேலைக்கு எடுத்தபோது ஆவணங்கள் தயாரித்த செலவு, இவரை நாட்டுக்கு திருப்பி அனுப்புகின்றமைக்கான விமானச் செலவு ஆகியவற்றுக்காக கழித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

 மிகுதிப் பணத்தை கொடுத்து இருக்கின்றார். விமான நிலையத்துக்கு ஏற்றிச் செல்ல நவம்பர் 02 ஆம் திகதி வருவார் என்று கூறி விட்டு போனார்.  எஜமானரின் மகன் நவம்பர் 02 ஆம் திகதி மாலை 7.30 மணியளவில் தூதரகத்துக்கு வந்து இவரை வாகனத்தில் ஏற்றி இருக்கின்றார்.

 வாகனத்தில் ஏற்றியமை தாமதம் வாகனத்தின் கதவுகளை இறுக மூடி விட்டார். ஆனால் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லவில்லை. மாறாக வீட்டுக்கு கொண்டு சென்றிருக்கின்றார்.



இவர் வாகனம் வீட்டுக்கு முன்னால் வாகனம் நிறுத்தப்பட்டது. இவர் வாகன கதவைத் திறந்து தப்பி ஓட பிரயத்தனம் செய்து இருக்கின்றார். ஆனால் வீட்டு வளவில் தயாராக இருந்த எஜமானரின் பிள்ளைகளில் வேறு மூவர் இவரைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து விட்டனர். தலை மயிரில் பிடித்து தர தர என்று இழுத்து வீட்டுக்குள் கொண்டு சென்றனர். வீட்டுக் கதவுகளைப் பூட்டினர்.



இவரின் பிரயாணப் பையை திறந்து சல்லடை போட்டு தேடினர். அதற்குள் இருந்த சம்பளப் பணத்தைப் பிடுங்கிக் கொண்டனர். நன்றாக நையப் புடைத்தனர். தோள்களில்தான் மாறி மாறி அடிகள் விழுந்தன. ஒரு அடி காது ஒன்றுக்கு அருகில் பட்டது. இரத்தம் சொட்டத் தொடங்கியது. ஆனால் தாக்குதல்கள் தொடர்ந்தன.

 காட்டுமிரண்டித்தனமான தாக்குதல்கள், வெறி பிடித்த ஓநாய்களின் தாக்குதல்கள் என்று இவர் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.  அடிக்கின்றமையை நிறுத்த வேண்டும் என்று பிள்ளைகளிடம் சொல்லுமாறு எஜமானியம்மாவிடம் கெஞ்சினார். ஆனால் எஜமானியம்மாவோ பிள்ளைகளுக்கு இன்னும் உருவேற்றினார்.



எஜமானரின் பிள்ளைகளின் இவரின் கூந்தலை பிடுங்கி எடுத்தனர்.  எஜமானி அம்மா  இவர் அணிந்திருந்த ஆடைகளை உருவினார். இவரது உள்ளாடைகளை சோதனை செய்தார். இவர் வீட்டில் இருந்து ஏதாவது பொருளைத் திருடிச் செல்கின்றாரா? என்கிற சந்தேகத்திலேயே இவ்வாறு தேடினார்.

 எஜமானி அம்மாவின் மகன்மார் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே இவர் ஆடைகள் களையப்பட்டு சோதனை செய்யப்பட்டார்.  ஆனால் அவ்வீட்டில் இருந்து வேலை பார்த்த நாட்களில் இவர் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் எவையும் இடம்பெற்று இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார். இவரிடம் பணம் எதுவும் இருக்கவே இல்லை.

 அடையாள அட்டை, விமான பயணச்சீட்டு, கடவுச்சீட்டு ஆகியன மாத்திரமே இருந்தன. விமான நிலையத்தில் இருந்து பை ஒன்றை பெற்றுக் கொண்டார். இவரைப் போலவே விமான நிலையத்துக்கு நிர்க்கதியான நிலையில் ஏராளமான இலங்கைப் பணிப்பெண்கள்  வந்திருந்தனர்.



இலங்கை வந்தடைந்த இவர் எஜமானர்களின் அனுபவித்த கொடுமைகள்,  சித்திரவதைகள் தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.

 தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவரது நரம்புகள் முறிந்திருக்கலாம் என்று வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர்.



அனுப்பியவர் சரவணன்
source http://tamilcnn.com

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

1 comments:

Rosee said...

கவலைக்குரியது.

அவரின் எஜமானியை தண்டிப்பதுடன் நின்றுவிடக் கூடாது. இதற்கெல்லாம் அடிப்படையாக இவரை விட்டு ஓடிப் போன கணவனையும் தேடித் பிடித்து தண்டிக்க வேண்டும்.

மனைவி குழந்தையை வைத்து காப்பாற்ற முடியாதவன் எல்லாம் கலியாணம் கட்டக் கூடாது. படுக்கக் கூடாது.

இவரைப் போல் எத்தனை பெண்கள் புருஷன் இருந்தும் விதவைகள் போல் ஆகியிருக்கிறார்கள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...