நடுரோட்டில் நிர்வாணக் கோலத்தில் வந்த முதியவர்:


 







  சேலம்: சேலம் புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் நிர்வாணக் கோலத்தில் தட்டு தடுமாறியபடி வந்த முதியவரை அவ்வழியாக சென்றவர்கள் காட்சி பொருளாக கண்டனரே தவிர, அவரது மானத்தை மறைக்க யாரும் உதவிட முன்வராதது மனித நேயம் முற்றிலுமாக மரித்துப்போய் கிடக்கிறது என்ற வேதனையான உண்மையை உணர்த்தியது. 

வாகனங்களின் இரைச்சலுக்கு மத்தியில் சேலம் மாநகரம் மூழ்கி கிடக்கிறது. வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களைச் சேர்ந்தோரும் இங்கு ஏராளமானோர் உள்ளனர். மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தவறுகளும், குற்றங்களும் அதிகப்படியாக உள்ளது. வாழ வழியின்றி தவிக்கும் கூட்டம் சாலையோர பிளாட்பார்ம்களில் வெயில், மழை பாராமல் கிடக்கின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டோர் அழுக்கு மூட்டைகளுடன் சுமைதாங்கிகளாக வீதியில் சுற்றிதிரிகின்றனர். அது ஒரு புறமிருக்க, உறவுகளால் ஒதுக்கப்பட்டவர்கள் பசி கொடுமையால் ஆடையின்றி குழந்தை மேனியாக வலம் வரும் நிகழ்வுகளும் சேலம் மாநகரத்தில் அதிகரித்துள்ளது. வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்ள தன்னார்வ அமைப்புகளை உருவாக்கும் நபர்கள், இல்லாதோர், இயலாதோருக்கு உதவ முன்வருவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. சேலம் திருவள்ளுவர் சிலை அருகில் நேற்று மாலை கொட்டும் மழையில் உடலில் ஆடையின்றி முதியவர் ஒருவர் தட்டு தடுமாறியபடி புதிய கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தார். வாகனங்களில் சென்றோர் அவரை வேடிக்கை பார்த்தபடி சென்றனரே தவிர, முதியவரின் மானத்தை மறைக்க யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில், அவ்வழியாக வந்த ஆட்டோ டிரைவர் நல்லாச்சி, தனியார் மொபைல் நிறுவன ஊழியர் சேதுராமன் இருவரும் முதியவருக்கு உதவ முன் வந்தனர். ஆட்டோ டிரைவர் தன்னிடம் இருந்த துண்டை எடுத்து அவருடைய இடுப்பில் கட்டி விட்டு மானத்தை மறைத்தார். மொபைல் நிறுவன ஊழியர் அருகில் இருந்த ஜவுளி கடையில் அண்ட்ராயரை வாங்கி வந்து அணிவித்து விட்டார். என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில் முதியவர் சோர்ந்து கிடந்தார். அவர் பெயர், ஊர் விபரம் கேட்டபோது சொல்ல முடியாமல் தவித்தார். உறவுகளால் ஒதுக்கப்பட்டு நடுரோட்டுக்கு அடித்து விரட்டப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. தன் குடும்பம், தன் மக்கள் என்று ஓடுவோர் எண்ணிக்கை தான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரு சிலர் மட்டுமே உதவும் மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான மனிதர்களிடம் மனித நேயம் என்பதே மரித்துப்போய் விட்ட ஒன்றாகி விட்டது.



அனுப்பியவர் சந்தோஷ் 
source  dinamalar

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...