தி.மு.க.,வை ஆட்சிக்கு வர விடமாட்டேன் : விஜயகாந்த் சபதம்



 ""கூட்டணி குறித்து பேச அவசரமில்லை. தேர்தலின் போது பேசிக் கொள்வோம். ஆனால், தி.மு.க.,வை அடுத்த முறை ஆட்சிக்கு வர விடமாட்டேன்,''  என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

 காஞ்சிபுரம் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில், பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பானி வழங்கும் விழா, காஞ்சிபுரத்தில் நடந்தது.  விஜயகாந்த் பேசியதாவது,பக்ரீத் பண்டிகையின் நோக்கமே இருக்கிறவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கணும் என்பது. அதை  பின்பற்றி வருகிறேன். நான் அரசியல் பேசினால் தி.மு.க.,விற்கு கோபம் வருகிறது.  உலக அளவில் இதுவரை நடக்காத அளவிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாகக் கூறிய குற்றச்சாட்டின் பேரில், நேற்று முன்தினம் ராஜா ராஜினாமா செய்துள்ளார். ஊழல் செய்ததன் மூலம் கிடைத்த பணத்தை அவர் திரும்பக் கொடுக்க வேண்டும். ஏனெனில் அது மக்களின் வரிப்பணம்.ராஜினாமாவிற்கு பின் சென்னை திரும்பிய ராஜாவை வரவேற்க தி.மு.க.,வினர், சட்டத்தை மீறி விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். அவர் என்ன காவிரியில் தண்ணீர் விடாததைக் கண்டித்து ராஜினாமா செய்தாரா, பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து ராஜினாமா செய்தாரா, முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக ராஜினாமா செய்தாரா, இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்கு உதவுவதற்காக ராஜினாமா செய்தாரா?

 ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுப்பதாகக் கூறுகின்றனர். அரிசி கொடுத்தால் போதுமா? குழம்பு வைக்க வேண்டாமா? அரிசியை மாட்டு வண்டி, லாரி, ரயில் என அனைத்து வாகனங்களிலும் கடத்துகின்றனர். இத்திட்டத்தால் கடத்தல்காரர்களுக்கு பயன். ஏழை மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாகக் கூறினர். ஆனால், தேனி மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்து தெரிந்தவர்களுக்கு கொடுத்துள்ளனர். விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. மக்கள் அவதிப்படுகின்றனர்.இதைக் கூறினால், விஜயகாந்திற்கு பதவி ஆசை என்கின்றனர். கருணாநிதியை கேட்கிறேன், உங்களுக்கு பதவி ஆசை இல்லையா?. எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எனக்கு ஆட்சியை தாருங்கள். எம்.ஜி.ஆர்., குணமாகி வந்ததும் திரும்ப அவரிடமே ஆட்சியை தருகிறேன் என கெஞ்சிய உங்களுக்கு பதவி ஆசை இல்லையா? நேரு குடும்பத்தினர் மட்டுமே ஆள, நாடு என்ன சங்கர மடமா எனக் கேட்டீர். அதே கேள்வியை நான் கேட்கிறேன். உங்கள் குடும்பம் மட்டுமே ஆள இது என்ன சங்கர மடமா?

 துணை முதல்வர் ஸ்டாலினும் புதிதாக கட்சி ஆரம்பித்தவருக்கு முதல்வர் பதவி மீது ஆசை என்கிறார். நீங்கள் துணை முதல்வராக ஆசைப்படவில்லையா? இல்லை என்றால் துணை முதல்வர் பதவியை அன்பழகனுக்கோ, கோ.சி.மணிக்கோ, ஆற்காடு வீராசாமிக்கோ கொடுத்திருக்கலாமே. இல்லையெனில் மூத்தவர் அழகிரிக்காவது கொடுத்திருக்கலாமே. உங்களுக்கு ஆசை இருக்கலாம், எனக்கு ஆசை இருக்கக் கூடாதா? நான் என்ன மடமா நடத்துகிறேன். விலைவாசி ஏறுது, மக்கள் சிரமப்படுகின்றனர் எனக் கூறினால், மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது என்கிறார்.  மக்கள் ஏழ்மையை போக்க வீட்டிற்கு 500 ரூபாய் கொடுப்பேன் என இரண்டு வருடங்களுக்கு முன் கூறினேன். தற்போது உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி கொடுக்கிறார். 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்  இணைப்பு என்கிறார். மின்சாரம் இல்லையே.

 இலவசம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றனர். கருணாநிதியை ஊழல் ராஜா என ஜெயலலிதா திட்டுகிறார். அவரை ஊழல் ராணி எனக் கருணாநிதி திட்டுகிறார். இருவரும் திட்டிக்கொள்ளும் போதுதான் ஊழல் வெளியே தெரிகிறது. சுய மரியாதை இயக்கத்தில் வந்ததாகக் கூறும் கருணாநிதி மஞ்சள் துண்டு அணியாமலிருப்பதில்லை. ராஜராஜசோழன் ஆயிரமாவது ஆண்டு விழாவில் கூட மஞ்சள் பட்டு அணிந்து வந்தார். அவர் வீட்டு குடும்பத்தினர் சத்தம் இல்லாமல் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.கருணாநிதி தமிழன் என்று சொல்லடா, தலை குனிந்து நில்லடா என்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளார். ஸ்பெக்டரம் ஊழலால் தமிழர்கள் தலை குனிந்து நிற்கின்றனர்.

 கூட்டணி குறித்து பேச அவசரமில்லை. தேர்தலின்போது பேசிக் கொள்வோம். ஆனால், தி.மு.க.,வை அடுத்த முறை ஆட்சிக்கு வர விடமாட்டேன்.  உங்கள் கோபத்தை தேர்தலில் காண்பியுங்கள். காசு கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்கள் பணம். ஆனால், ஓட்டை மாற்றிப் போடுங்கள். தி.மு.க., ஆட்சியில் ஊழல், காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்க்கிறது. அடுத்து ஊழல் இல்லாத கட்சி ஆட்சிக்கு வரணும். பத்திரிகையாளர்கள் அ.தி.மு.க.,வை திட்டவில்லை. எனவே அதனோடு கூட்டணியா எனக் கேட்பர். எனக்கு மக்களோடு கூட்டணி. நான் ஏன் கைகட்டி நிற்கணும். எனக்கு மக்கள் நன்றாக இருக்க வேண்டும். அதற்குரிய முடிவை எடுப்பேன்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார். 


 அனுப்பியவர் சுரேஷ் 
source  http://www.dinamalar.com

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...